தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் கவுதம் கார்த்திக் தொடர்ந்து, வை ராஜா வை, இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன் தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அடுத்து அவர் நடிப்பில் பத்து தல,ஆகஸ்ட் 15, 1947 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மலையாளத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமாகி, அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் அக்டோபர் 31 லேடிஸ் நைட் என்ற படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகிறது. புகைப்படத்தில், மஞ்சிமாவும் கௌதமும் வெள்ளை நிறத்தில் உடையணிந்து புன்னகையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்தபோது நண்பர்களாக பழகிய கவுதம் மஞ்சிமா இருவரும் பின்னாளில் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதில் கவுதம் தனது காதலை சொன்னபோது இரண்டு நாட்களுக்குப் பிறகு மஞ்சிமா அதை ஏற்றுக்கொண்டதாகவும், அதன்பிறகு இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்து தற்போது திருமணத்தில் முடித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil