சென்னையில் பிறந்த ஜோக்கர் துளசி தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். பிரதான துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மேடை நடிகராகத்தான் பிரபலமானார். சென்னையிலுள்ள கண்மணி நாடகக் குழுவில் முதன்மையான நடிகராக விளங்கியவர்.
தமிழ் சினிமாவில் 1976 இல் வெளியான தேவராஜ்-மோகன் இயக்கிய தமிழ் திரைப்படமான “உங்களில் ஒருத்தி” படத்தில் துளசி அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் . போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். குறிப்பாக திருமதி பழனிச்சாமி படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இது 1992 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் அது ஒன்றாகும். அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்த அவர், கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி, முத்தராம், கஸ்தூரி, நாணல், மாதவி, அழகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோக்கர் துளசி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையை சேர்ந்த பலரும் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாணி ராணியில் ஜோக்கர் துளசி ராதிகா சரத்குமாருடன் நடித்திருந்தார். இவரது மறைவு குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராதிகா சரத்குமார், ஜோக்கர் துளசி என்ற மிக அற்புதமான மனிதர். பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர். நேர்மறையான எண்ணங்களுடன் தினமும் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார். வாணி ராணியில் அவருடன் பணியாற்றிய நினைவுகள் மறக்கமுடியாதவை என பதிவிட்டுள்ளார்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் ராம் மோகனும் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"