முதல்வர் கோப்பை போட்டிக்கான ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகராக இருந்து தற்போது அரசியலில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக ஆவதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் படமே தனது கடைசிபடம் என்று அறிவித்திருந்தார். அமைச்சர் பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் விலகினார்.
தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலனில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனால் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உதயநதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த தீம் பாடலுக்கு களம் நமதே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உலக நாயகன் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2023
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி…
இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும் என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“