திருப்பதி லட்டு தொடர்பான கருத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரமோஷனில் பங்கேற்ற நடிகர் கார்த்தி லட்டு தொடர்பாக தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டில் கலக்கப்பட்ட நெய்யில், மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த தகவல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சர்ச்சையால், திருப்பதியின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் சார்பில், சிறப்பு யாகங்கள் நடத்த்தப்பட்டு வருகிறது.
திருப்பதி லட்டு தொடர்பான விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், திருப்பதி லட்டின் புனித்தன்மையை மீட்டெடுக்கும் வகையில், தான் விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பான நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்ததும், அதற்கு பவன்கல்யாணம் பதில் கொடுத்ததும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே அடுத்த வாரம் வெளியாக உள்ள தனது மெய்யழகன் படத்தின், ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் பேசும்போது, தொகுப்பாளர் அவரிடம் லட்டு வேண்டுமா என்று கேட்க, லட்டு மிகவும் சென்சிட்டீவ் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். தொகுப்பாளர் மீண்டும், மோத்தி லட்டாவது வேண்டுமா என்று கேட்க எனக்கு லட்டே வேண்டாம் என்று கார்த்தி கூறியிருந்தார். கார்த்தியின் இந்த பதிலால் அரங்கம் அதிர்ந்த நிலையில், சிரிப்பலைகள் அடங்க சற்று நேரமானது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்,“லட்டுவை மக்கள் கேலி செய்கிறார்கள். லட்டு ஒரு சென்சிட்டிவ் டாபிக் என்று நேற்று ஒரு திரைப்பட விழாவில் நடிகர் ஒருவர் கூறினார். இப்படியெல்லாம் சொல்ல உங்களுக்கு தைரியம் வராதே. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன், ஆனால் சனாதன தர்மம் என்று வரும்போது, அப்படி எதையும் சொல்வதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே லட்டு தொடர்பான தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்கள் மீது பெரிய மரியாதை இருக்கிறது. நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை கடைபிடித்து நடப்பவன். என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“