நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி... ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி கேட்டரிங் வழக்கு

'மாதம்பட்டி பக்‌ஷசாலா' என்ற நிறுவனம் தங்கள், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

'மாதம்பட்டி பக்‌ஷசாலா' என்ற நிறுவனம் தங்கள், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Joy Madhampatty

ஒருங்கிணைந்த உணவு சேவைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனமான 'மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்', அதன் நிறுவனர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜை மணந்ததாகக் கூறி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisment

பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள ஜாய் கிரிசில்டா, கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து ஆதாரங்களையும் தனது சமூகவலைதள பதிவுகளில் வெளியிட்டு வருகிறார், இதனிடையே. 'மாதம்பட்டி பக்‌ஷசாலா' என்ற நிறுவனம் தங்கள், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், இன்று ( செப்டம்பர் 9)  எதிர்மனுதாரரான ஜாய் கிரிசில்டாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நோட்டீஸ்க்கு, செப்டம்பர் 16-க்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். வழக்கு ஒரு வாரத்திற்குள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால், நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “'மாதம்பட்டி பக்‌ஷசாலா' என்ற பெயரில் நிறுவனம் ஆகஸ்ட் 30, 2010 அன்று தொடங்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, உணவு சேவைகள் மற்றும் கேட்டரிங் துறையில் 'மதமபட்டி பக்‌ஷசாலா' தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி, அதில் பணியாற்றும் தனிநபர்களின் கடின உழைப்பு மற்றும் தரமான உணவு சேவைகளின் காரணமாக ஏற்பட்டது.

Advertisment
Advertisements

மேலும், அதன் உயர்தர உணவு சேவைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளால், 'மாதம்பட்டி பக்‌ஷசாலா' கேட்டரிங்  துறையில் மிகவும் நம்பகமான பெயராக மாறியுள்ளது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் சமையல் இதழ்கள் மற்றும் பிற ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 2025-ல், ஜாய் கிரிசில்டா, 'மாதம்பட்டி பக்‌ஷசாலா', 'மாதம்பட்டி குழும நிறுவனங்கள்' மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பிராண்டுகள் ஆகியவற்றை ஹேஷ்டேக் செய்து அவதூறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கியதை நிறுவனம் கண்டறிந்தது" என்று வழக்கறிஞர் ராமன் குறிப்பிட்டார்.

இது குறித்து, நிறுவனம் தனது மனுவில், ஜாய் கிரிசில்டா, தவறான நோக்கத்துடன், நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் நடந்ததாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி, நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை மற்றும் எந்தவித உண்மையும் இல்லாதவை. 'மாதம்பட்டி பக்‌ஷசாலா'வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இவை திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஒரு தனிநபரின் தனிப்பட்ட விஷயங்கள், பல வருட கடின உழைப்பு மற்றும் நற்பெயரால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க பயன்படுத்தப்படக்கூடாது. எதிர்மனுதாரரின் இத்தகைய செயல்கள், நிறுவனத்திற்கு நிதி மற்றும் வணிக ரீதியான பெரும் இழப்பை ஏற்படுத்தும். எனவே, 'மாதம்பட்டி பக்‌ஷசாலா' நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தவொரு பொய்யான அல்லது தவறான தகவல்கள், அறிக்கைகள், வீடியோக்கள், பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையோ, பகிர்வதையோ, பரப்புவதையோ தடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், அவர் ஏற்கனவே பதிவிட்ட அவதூறான பதிவுகளை நீக்குமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: