கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், தொண்டர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் புகழ், இன்று முதல் பசி என்று வருபவர்களுக்கு எனது அலுவலகத்தில் மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி இடம் பிடித்திருந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்தார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு நெரில் அஞ்சலி செலுத்திய நிலையில், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வெளிநாட்டில் இருப்பதால் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல், டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ள நடிகர்கள் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடிகர் கார்த்தி தனது அப்பா சிவக்குமாருடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது நடிகர் சூர்யா இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் விஜயகாந்த் இறந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் புகழ் இன்று மீண்டும் அவரது நினைவிடத்திற்கு வந்துள்ளார். நினைவிடத்தில் மலையிட்டு மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
விஜயகாந்த் அய்யா பசி என்று வந்த அனைவருக்கும் சாப்பாடு கொடுத்திருக்கிறார் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். சாப்பாடு தவிர பலருக்கும் பல உதவிகள் செய்துள்ளவர் விஜயகாந்த் அய்யா. ஆனால் அவர் இறந்த பிறகு மற்ற உதவிகளை விட அவர் சாப்பாடு போட்டதை தான் அதிகமாக சொல்கிறார்கள். தற்போது அவர் இல்லை என்தால், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று முதல் எனது கே.கே.நகர் அலுவலகத்தில் பசி என்று வருபவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படும்.
இன்று முதல் இதனை தொடங்க இருக்கிறேன். விஜயகாந்த் அய்யா இறந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். இன்று வந்ததற்காக காரணம், அவரது வழியில் சாப்பாடு கொடுப்பதை தொடங்க இருப்பதால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன். என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து என்னால் முடிந்தவரை பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு வழங்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.