மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பாடப்பெற்ற பழமை வாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் பல்வேறு வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
வைத்தீஸ்வரன்கோயில் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால் தினம்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலில் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிடம் பிரபலம் என்பதால் தினம்தோறும் திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
இத்தகையை பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இன்று சந்திரன் ஸ்தலமான தஞ்சை மாவட்டம் திங்களூர் அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்த ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவை கண்ட பொதுமக்கள், பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“