ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து படப்பிடிப்பு தொடங்க உள்ள கூலி படத்தின் டிசரில் தனது அனுமதி இல்லாமல் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
விக்ரம் மற்றும் லியோ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து தனது 6-வது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிப்பட்டிருந்த இந்த படத்திற்கு டைட்டில் கூலி என்று அறிவித்த படக்குழுவினர் இதற்கான டைட்டில் டீசரையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியான இந்த டீசரில் தங்கம் மட்டும் கலரில் இருந்தது. ரங்கா படத்தில் வரும் வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் தங்கமகன் படத்தில் வரும் ‘’வா வா பக்கம் வா பாடலின் பின்னணி இசை ஒலிப்பதுடன் டீசர் முடிவடையும். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூலி படத்தின் டீசரில் தனது பாடலின் இசையை தனது அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்தியுள்ளதாக சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீசில், கூலி படத்தின் டீசரில் வரும், வா வா பக்கம் வா பாடலின் பின்னணி இசையை நீக்க வேண்டும். அல்லது அது குறித்து தன்னிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விக்ரம் படத்தில் நான் இசையமைத்த விக்ரம் பாடலையும், அவர் தயாரித்த ஃபைட் க்ளப் படத்தில் என் ஜோடி மஞ்சக்குருவி பாடலின் இசையையும் பயன்படுத்தியிருப்பார். இப்போது கூலி படத்திலும் எனது இசையை பயன்படுத்தியுள்ளார்.
கூலி டீசரில் இருந்து எனது இசையை நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா அந்த நோட்டீசில் தெரிவித்திருந்தார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கூலி டீசர் பின்னணி இசை பிரச்சனை குறித்து கேள்விக்கு இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை. காஃபி ரைட்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது இளையராஜாவின் முடிவு என்று கூறியுள்ளார். மேலும் கூலி டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றும், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.