அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை முடித்துள்ள நிலையில், அடுத்து தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம், தா.சா ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இதற்காக ரஜினிகாந்தின் சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாத்த. கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 110 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தையும் சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்து தா.சா.ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்து வரும் நிலையில், இந்த படங்களுக்கு ரஜினிகாந்த் பெரும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லால்சலாம் படத்திற்கு ரூ25 கோடியும், ஞானவேல் படத்திற்காக ரூ80 கோடியும் என மொத்தம் 105 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்திற்காக 110 கோடி சம்பளம் பெற்ற ரஜினிகாந்த், லைகா நிறுவனத்தின் 2 படங்களுக்கு மொத்தமாகவே 105 கோடி சம்பளம் பெறுவது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“