/indian-express-tamil/media/media_files/2025/03/23/J71PrzdXIZ29bj9LoWjS.jpg)
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் காண்டு கடலோர பகுதி வாழ் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகரு ரஜினிகாந்த் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதேபோல் கூலி மற்றும் ஜெயிலர் படங்களை அடுத்து ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல இளம் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஆக்டீவாக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது வெளியாகும் படங்களை பார்த்து விட்டு அந்த படங்களை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே தற்போது வழக்கத்திற்கு மாறாக, நாட்டின் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு.
இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவிற்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள், என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.