Advertisment
Presenting Partner
Desktop GIF

என்னை நீண்ட நாள் வாழ சொன்னவர் சரத்பாபு... பிரதமர் முதல் ரஜினிகாந்த் வரை பிரபலங்கள் இரங்கல்

ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sarathbabu-tributes-1200

நடிகர் சரத்பாபு மரணம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்த நிலையில்’, அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடைபெற்றது. முன்னணி நடிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராமராஜ்யம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சரத்பாபு, பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் வசந்த முல்லை, தெலுங்கில் மல்லி பெள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்த சரத்பாபு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தெலுங்கானாவில் இறந்த சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சரத்பாபுவின் மறைவுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சரத்பாபு எனக்கு பழக்கம். நாங்கள் நல்ல நண்பர்கள். மிகவும் அருமையான மனிதர். எப்போவும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார்.

நான் அவருடன் நடித்த அத்தனை படங்களும் பெரிய வெற்றிப்படங்கள். என்மேல் அவருக்கு அளவுகடந்த அன்பு பிரியம். எப்போவுமே நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுவார். சிகரெட் பிடிப்பதை நிறுத்து உடம்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம் ரொம்ப நாள் வாழவேண்டும் என்று சொல்வார். அதனால் அவர் முன்பு நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன்.

அண்ணாமலை படத்தில் அவர் வீட்டில் சென்று சவால் விடுவது போன்ற காட்சி. அப்போது அந்த காட்சி சரியாக வரவில்லை. அதை பார்த்த சரத்பாபு என்னை அழைத்து அமரவைத்து சிகரெட் பற்ற வைத்து கொடுத்தார். பதட்டபபட வேண்டாம் ரிலாக்சாக இருங்கள் என்று சொன்னார். அதன்பிறகு அந்த டேக் ஓகே ஆனது. என்னை நீண்டநாள் இருக்க வேண்டும் என்று சொன்னவர் இப்போது அவர் இல்லாதது ரொம்ப வருத்தம் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீ சரத் பாபு ஜி பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் பல தசாப்தங்களாக தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த இக்கட்டான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. திரையுலகில் சரத் பாபு ஜியின் பாரம்பரியம் மிகப் பெரியது என கூறியுள்ளார்.

நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அவரது சகோதரரிடம் உறுதிப்படுத்திய பிறகு, பல்துறை நடிகரும், சிறந்த மனிதருமான ஸ்ரீ சரத் பாபுகாருவின் மறைவை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஆழ்ந்த இரங்கல் சரத்பாபு நிம்மதியாக இருங்கள் என்று அவரும் சரத்பாபும் சேர்ந்திருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், எப்போதும் சிரிக்கும் இந்த ஆன்மாவை சந்தித்ததில் வியப்பு.. அவரது அரவணைப்பையும் ஊக்கத்தையும் எனது வாழ்க்கை முழுவதும் போற்றுவேன்.. அனைத்திற்கும் நன்றி அன்புள்ள சரத்பாபு ஆத்மா சாந்தியடையட்டும் என்ற பதிவிட்டுள்ளார்.

நடிகையும் இயக்குனருமான சுஹாசனி மணிரத்னம் தனது ட்விட்டர் பதிவில், என் அன்பான திரையுலக சகோதரர் சரத்பாபுவை இழந்துவிட்டேன்.. ஒரு மனிதனாக அவரது மகத்துவத்தையும் ஒரு நடிகராக அவரது மென்மையையும் நினைவுகூர வேண்டிய நேரம் இது. நான் ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டேன். என் அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment