தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தளபதி என்ற பட்டத்துடன் வலம் வரும் நிலையில், இதற்கு முன்பு அவர் வைத்திருந்த இளையதளபதி பட்டம் பருத்திவீரன் சரவணன் ஏற்கனவே பயன்படுத்தியது என்று அவரே கூறியுள்ளார்.
1992-ம் ஆண்டு வெளியான நாளை தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள விஜய் தற்போது ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களால் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கு முன்பு இளையதளபதி என்ற பட்டத்துடன் வந்த விஜய் அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் இருந்து தளபதி விஜய் என்ற பட்டத்தை பெற்றார். அப்போது ஏற்கனவே தமிழக அரசியலில் முதல்வர் ஸ்டாலின் தளபதி என்ற பட்டத்துடன் வலம்வருவதால், விஜய் அந்த பட்டத்தை பயன்படுத்த கூடாது என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வந்தனர்.
ஆனாலும் தற்போது அவர் தளபதி விஜய் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்தி வருகிறார். இதனிடையே விஜய் முன்பு பயன்படுத்திய இளையதளபதி பட்டம் நடிகர் சரவணன் பயன்படுத்தியது என்று அவரே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 1991-ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவணன்.
தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, விஸ்வநாத், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நாயஙகனாக நடித்துள்ளார். இதில் ஒரு சில படங்களை தயாரித்துள்ள சரவணன், 2003-ம் ஆண்டு வெளியான தாயுமாணவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தில் ரீ-என்டரி கொடுத்தார்.
தற்போது பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சரவணன், சமீபத்திய நேர்காணலில் இளையதளபதி பட்டம் முதலில் நான் பயன்படுத்தியது. பிறகு விஜய் பயன்படுத்தினார். என்னை விட அவருக்குதான் இந்த பட்டம் பொருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ள சரவணன், நான் நடிக்க வந்த புதிதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் எனக்காக விழா எடுத்து இந்த பட்டத்தை வழங்கியதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“