வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ரஜினிகாந்துடன் 40 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று அழைக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தங்கம் கடத்தலை மையமாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் இதை உறுதி செய்த நிலையில், படத்திற்கு கூலி என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்த செய்தி உண்மையாக இருந்தால் ரஜினிகாந்த் – சத்யராஜ் இருவரும் 40 ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் இணையவுள்ளனர். முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் பல தமிழ் படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக, இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்கள், இப்போது தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்தில் நடிக்க அவர்கள் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, 2008-ம் ஆண்டு ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது, ஆனால் சத்யராஜ் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார், அதன்பிறகு இந்த படத்தில் வில்லனாக சுமன் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன், சத்யராஜின் மகன் சிபிராஜ் ஒரு திரைப்பட ப்ரோமோஷனில் ப, ரஜினிகாந்துக்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால் அவர்கள் சண்டை இல்லை. இது ஒரு சிறிய பிரச்சினையாக இருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.
இப்படத்தில் சத்யராஜ் தவிர ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி, மோகன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவில்லை. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“