சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் என பல தடைகள் இருந்தாலும் எப்போதும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான சிம்பு, 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல ஆக்ஷன் காதல், காமெடி என பல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முன்னணி நடிகரான தன்னை நிலை நிறுத்திக்கொண்ட நடிகர் சிம்பு, அவ்வப்போது சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் என பல தடைகளை எதிர்கொண்டு வந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய நடிகராக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சிம்பு அடுத்த படமாக எஸ்.டி.ஆர் 48 (தற்காலிக பெயர்) படத்திற்காக தயாராகி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
தற்போது 40 வயதாகும் நடிகர் சிம்பு, இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், அவரது காதல் வாழ்க்கையைப் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலங்கைப் பெண்ணுடன் அவருக்கு திருமணம் என்று தகவல்கள் வெளியானது. தற்போது ஆந்திராவை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர் மற்றும் பைனான்சியர் மகளுக்கும் சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வௌயாகி வருகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்று வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் நயன்தாராவுடன் காதலில் இருந்த நடிகர் சிம்பு அடுத்து நடிகை ஹன்சிகாவுடன் காதலில் இருந்தார். இந்த இரு காதலுமே தோல்வியில் முடிந்த நிலையில், சமீபத்தில், தெலுங்கு நடிகை நிதி அகர்வாலுடன் காதல் இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது. கடைசியில் அதுவும் வதந்தியாக போனது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“