யூடியூப் சேனல்களில் தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறி ரூ5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்துள்ள நடிகர் சிங்கமுத்து, நான் பேட்டி அளிக்க தடை கோர அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சம் தொட்டவர் வடிவேலு. தனது காமெடியின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், காலப்போக்கில் நடிகர் சிங்கமுத்து, உள்ளிட்ட நடிகர்களுடன் தனது காமெடி பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு படங்களில் நடித்து வந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த பல காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதனிடையே நிலம் வங்குவது தொடர்பாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். சிங்கமுத்துவின் மகன், கார்த்திக் சிங்கா, மானா மதுரை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானபோது அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். இந்த படம் வெற்றியை பெறவில்லை என்றாலும், வடிவேலுவின் காமெடி காட்சிகள் சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், சிங்கமுத்து, சூரியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். வடிவேலு இம்சை அரசன் 2-ம் பாகம் படத்தின் சர்ச்சை காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். வடிவேலுவிடம் இருந்து பிரிந்த சிங்கமுத்து யூடியூப் சேனல்களில், வடிவேலுவை பற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.
இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள, வடிவேலு, ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெறரை களங்கப்படுத்தும் விதமாக, சிங்கமுத்து என்னை பற்றி அவதூறான கருத்துக்களை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். எனவே என்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்ப அவருக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் இந்த செயலின் காரணமாக எனக்கு ரூ5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வடிவேலு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தற்போது பதில் மனுவை தாக்கல் செய்துள்ள நடிகர் சிங்கமுத்து, நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன். மனஉளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்து கூறவில்லை. என்னை துன்புறுத்தும் நோக்கில் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி வடிவேலு தவறாக சித்தரித்தார். அவர் சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை. அவரை பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. ஆகவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“