திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சூர்யா 44 படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என்ற அழைக்கப்படும் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் 1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இந்த படத்தில் மற்றொரு நாயகனாக விஜய் நடித்திருந்தார். முதல் படத்தில் சூர்யாவின் நடிப்பு பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
அதன்பிறகு, காதலே நிம்மதி, சந்திப்போமா ஆகிய படங்களில் நடித்த சூர்யா, 1999-ம் ஆண்டு வெளியான பெரியண்ணா படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு, பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் பாலா. கடந்த 2001-ம் ஆண்டு வெளியான பாலாவின் நந்தா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
தொடர்ந்து உன்னை நினைத்து, காக்க காக்க, ஆயுத எழுத்து, மாயாவி, கஜினி, வேல், அயன், சிங்கம், 7-ம் அறிவு, ஜெய்பீம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த சூர்ய கடைசியாக, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், அதன்பிறகு சூர்யா நடிப்பில் வேறு படங்கள் வெளியாகவில்லை. அதே சமயம், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து வரும் சூர்யா, திரையுலகில் தனது 27-வது வருடத்தை நிறைவு செய்துள்ளார். இவர் நடித்த முதல் படமான நேருக்கு நேர் படம், கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி வெளியானது. அதன்படி 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், சூர்யா 44 படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டைலிஷ் லுக்கில் சூர்யா அவருக்கு பின்னால் நேருக்கு நேர் படத்தில் இருக்கும் சூர்யாவின் படம் என இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“