சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிருக்கான விருது வென்ற சூர்யா அந்த படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற சூர்யாவின் மனைவி ஜோதிகா இருவரும் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய இந்த படத்தில் அபர்னா பாலமுரளி நாயகியாக நடித்திருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் சிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் 68-வது தேசிய விருது விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில் சூர்யாவுடன் அவரது மனைவி, நடிகை ஜோதிகா மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், சூரரைப்போற்று படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் சுதா கொங்காரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சூர்யா, நடிகை அபர்னா பாலமுரளி ஆகியோர் விருது பெற்றனர்.
இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்ற நடிகர் சூர்யா இந்த விருதைக் கொண்டாடும் விதமாக தனது அப்பா சிவக்குமார் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவித்து, “எப்போதும் நன்றியுள்ளவனாக சுதா. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்கானது. "சூரரைப் போற்று" மற்றும் "தேசிய திரைப்பட விருதுகள்" என்று ஹேஷ்டேக்குகள் பதிவிட்டுள்ளார்.
சிறந்த திரைப்படப் பிரிவில் சூரரைப் போற்று படத்திற்காக விருது பெற்ற நடிகை ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பெருமையும் ஆசீர்வாதமும்” என்று எழுதி, தங்கள் குழந்தைகள், மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொண்டார், அவர் தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இதற்கு முன், அஜய் தேவ்கன் ஜாக்ம் (1998) மற்றும் தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங் (2002) ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil