சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனின் புதிய கிளை திறப்பு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நிலையில், நிகழ்ச்சியில் சூர்யா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா ஒரு சில படங்களை தயாரித்துள்ள நிலையில், அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் பல மாணவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு, தொடங்கப்பட்ட இந்த அகரம் பவுண்டேஷன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த பவுண்டேஷனின் புதிய கிளை சென்னை தியாகராய நகரில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா கூறுகையில், 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பவுண்டேஷன் இப்போது ஆலமரமாக வளர்ந்து இந்த அளவிற்கு வந்துள்ளது. எனக்கு இவ்வளவு அன்பும் மரியாதையும் கொடுத்த மக்களுக்கு நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது இது தோன்றியது. அப்பா அம்மாவால் காசு கொடுக்க முடியாத நிலை காரணமாக பல முதல் தலைமுறை மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்படுகிறது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல், தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதுதான் அகரம் பவுண்டேஷன் தொடங்கவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. முதலில் 10-க்கு 10 அறையில் தொடங்கிய இந்த அலுவலகம் அதன்பிறகு, ஒரு வீட்டுக்கு மாறியது. அதன்பிறகு அப்பா அவரின் வீட்டை கொடுத்தார். அதன்பிறகு அவரது வீட்டில் அகரம் பவுண்டேஷன் செயல்பட்டு வந்தது.
2006-ல் தொடங்கினாலும் 2010-ல் தான் விதை என்ற திட்டத்தை கொண்டு வந்து, அரசு பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கல்லுரி படிப்பை கொடுக்க திட்டமிடப்பட்டது. இது முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இதுவரை 5813 மாணவ மாணவிகள் படித்து முடித்திருக்கிறார்கள். தற்போது 2000 மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது படித்து வரும் 2000 மாணவர்களின் 70 சதவீதம் பேர் மாணவிகள்.
முதலில் 100 மாணவ மாணவிகளை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அப்போது 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தது. இப்போது ஆண்டுக்கு 700 மாணவர்களை படிக்க வைத்து வருகிறோம். அப்போவும் 10000 விண்ணப்பங்கள் வந்துகொண்டு இருக்கிறது, நான் சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, அகரம் அலுவலகத்தை திறந்து வைக்கும்போது அதிகமான சந்தோஷம் கிடைக்கிறது என்று சூர்யா பேசியுள்ளார்.