தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான தலைவாசல் விஜய் தனது மகளுக்கு கிரிக்கெட் வீரரை மாப்பிள்ளையாக்க உள்ளதாக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான வலம் வருபவர் தலைவாசல் விஜய். 1992-ம் ஆண்டு வெளியான தலைவாசல் படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான இவர், முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞராகவும் பல நடிகருக்கு குரல் கொடுத்துள்ளார்.
25 வருட சினிமா வாழ்க்கையில் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தலைவாசல் விஜய், தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் இவர், 2004-ஆண்டு வெளியான மார்னிங் ராகா என்ற படத்தின் மூலம் ஆங்கிலத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தலைவாசல் விஜயின் மகள், நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தகவல் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது.தலைவாசல் விஜயின் மூத்த மகள் ஜெயவீனா, நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற, 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஜெயவீனா பதக்கம் வென்றிருந்தார்.

இதனிடையே ஜெயவீனா பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக கிரிக்கெட் வீரரான பாபா அபராஜித், 17 வயதில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். தொடர்ந்து 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலககோப்பை தொடரில், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர், 2013-ம் ஆண்டு துலிப் டிராபி தொடரில் இரட்டை சதம் அடித்தார்.
இந்நிலையில், தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா – பாபா அபராஜித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/