வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள விடுதலை 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கங்குவா படம் குறித்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாக படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், சூரி, சேத்தன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லது சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விடுதலை 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில், கிரேட் ஆந்திரா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்த நேர்காணலில், தமிழ் சினிமாவில், பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை சந்திப்பதும், சிறிய படங்க்ள வெற்றி பெறுவதையும் பார்க்க முடிகிறது என்று தொகுப்பாளர் கேட்க, சிறிய படம் பெரிய படம் என்று இல்லை, படம் நன்றாக இருந்தால் ஓடும் என்று கூறியுள்ளார். மேலும் தொகுப்பாளர். தெலுங்கில் பெரிய பட்ஜெட் படங்கள் ஓடுகிறது. தமிழில் அவ்வாறு ஓடுவதில்லையே தோல்வியை சந்திக்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, பெரிய ஹீரோ, பெரிய படம் என்று இல்லை. எல்லோரும் ஹிட் கொடுக்கவே உழைக்கிறோம். சில நேரங்களில் அந்த கணக்கு மிஸ் ஆகிறது. இது எல்லோருக்கும் நடக்கும் ஒன்று தான். எனக்கே கூட நடந்திருக்கிறது, இதற்காக கிண்டல் மற்றும் கேலிகளை கூட நான் சந்தித்திருக்கிறேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். வெற்றி தோல்வியை கணிக்க முடியாது என்று தான் நான் சொல்ல வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட தொகுப்பாளர் நீங்கள் சொல்வது சரிதான். நான் இப்போதைய தமிழ் சினிமாவின் சூழலை சொல்கிறேன் என்று சொல்ல, இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து இயக்குனர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைதான். தவறு நிகழும்போது என்ன தவறு என்பதை சரிபார்த்து திருத்திக்கொள்வது வேண்டியது அவசியம் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளர் கங்குவா படம் தோல்வி தானே என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட விஜய் சேதுபதி, நான் விடுதலை 2 படத்தின் ப்ரமோஷனுக்கான வந்திருக்கிறேன். அதை விட்டுவிட்டு ஏன் இந்த படத்தை பற்றி பேச வேண்டும்?, நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறிவிட்டேன். என்னுடைய படங்களே தோல்வியை சந்தித்திருக்கின்றன என்றும் சொல்லிவிட்டேன். இது எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் வேண்டியது வெற்றிதான்.
என் படம் வெளியாவதற்கு முன்பு மக்களுக்கு போட்டு காட்டுவோம். அதிக காலம் ஒரு படத்துடன் பயணித்தால், அந்த படத்தை பற்றி மக்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைப்பேன்.
என்னுடைய மெர்ரி கிறித்துமஸ் திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்னதாக 200-க்கு மேற்பட்டோரிடம் போட்டு காட்டினோம் அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த படம் தியேட்டரில் சரியாக போகவில்லை. சில நேரம்இப்படியும் நடக்கும் என்று பதில் அளித்துள்ளார். கங்குவா படம் தொடர்பான கருத்துக்கள் தற்போது அடங்கியுள்ள நிலையில், மீண்டும் அது பற்றி பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தெலுங்கு தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“