விடுதலை படத்தை தொடர்ந்து, சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், சூரியின் படத்திற்க தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு கேரக்டரில் நடித்து வென்னிலா கபடிக்குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக உயர்ந்தவர் சூரி. தொடர்ந்து தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கிய இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது.
படத்தில் காவல்துறை கான்ஸ்டபிளாக சூரியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சூரி தற்போது காக்கிச்சட்டை, கொடி போன்ற படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் நடித்துள்ளார். சசிகுமார், மலையாள நடிகர் உன்னிமுகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியாக அமைந்த எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் துரைசெந்தில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து வந்து சூரி தற்போது ஒரு இடத்தை பிடித்துள்ளார். விடுதலை படத்திற்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அவர் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையும் கடவுளும் சூரியை ஆசீர்வதிச்சிருக்காங்க என்று நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“