தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், ஆந்திராவில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான தமன் இந்த படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரபல தெலுங்க தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது
மேலும் சங்கராந்தி பண்டிகைக்கு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால், விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முடிவை திரும்ப பெறவில்லை என்றால், தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் இது விஜய் என்னும் ஒரு நடிகருக்கு எதிராக எழுந்த சிக்கல் அல்ல ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட வெளியீட்டிற்கு எதிராக கொடுக்கப்படும் நெருக்கடி. விஜய் படத்திற்கே இந்த நிலை என்றால் மறற நடிகர்களின் படங்கள் என்னவாகும் என்று கேட்டுள்ளார்.
இந்நலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள இயக்குனர் பேரரசு கூறுகையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், உள்ளிட்ட டெக்னீஷியன்கள் அனைவருமே தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் ஹீரோ மட்டும்தான் தமிழகத்தை சேர்ந்தவர். இதனால் தெலுங்கு திரையுலகம தமிழ் ஹீரோவை கார்னர் செய்கிறார்கள். தமிழர்கள் ரொம்ப பெருமைக்குரியவர்கள். பெருந்தன்மைக்குரியவர்கள்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர், காந்தாரா, கேஜி.எஃப், படங்களை தமிழகத்தில் நாம் கொண்டாடினோம். இதில் தமிழ் புத்தாண்டு அன்று கேஜிஎஃப் 2 பீஸ்ட் படங்கள் ஒன்றாக வெளியானது. இதில் கேஜிஎஃப் 2 படத்தையும் தூக்கி வைத்து கொண்டாடினோம். தமிழ் திரையுலகை சேர்ந்த எவரும் கேஜிஎஃப் 2 படம் வெளியானால் பீஸ்ட் வசூல் பாதிக்கும் என்று எதிர்ப்புதெரிவிக்கவில்லை.
தமிழ் திரையுலகம் பெருந்தன்மையுடன் எல்லா மொழி படங்களையும் வரவேற்றுக் கொண்டிருக்கும்போது, பண்டிகையின்போது தெலுங்கு படத்திற்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்வது நம்மை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதை எதிர்த்து தமிழ் தயாரிப்பாளர் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தாலும் தயாரிப்பாளர் ஒன்னுதான். அவர்கள் தான் பணம் போடுகிறார்கள்.
அதேபோல் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கில் படத்தை வெளியிட வேண்டும் என்று பல வேலைகளை செய்திருப்பார். ஆனால் இப்போது அவர் சிக்கலில் இருக்கும்போது அவர் தெலுங்கு தயாரிப்பாளர் என்று பார்க்காமல் தமிழ் தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது தமிழ்படம். மேலும் இந்த விவகாரத்தில் சேம்பர் குழு என்ன செய்கிறது.
தமிழக மக்கள் நாங்கள் எல்லா படங்களையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தமிழ்படங்களை புறக்கணித்து எங்களது தமிழ் உணர்வை தூண்டுகிறீர்கள் நாம் தான் திராவிடம் என்று சொல்லிஅனைவரையும் சகோதரராக பார்க்கிறோம். ஆனால் ஆந்திரா கேரளா கர்நாடகா மாநிலத்தில் திராவிடம் என்ற வார்த்தையே இல்லை.
தமிழர்களை திராவிடனாக பார்க்காமல் தமிழராக பார்பபதற்கான உதாரணம்தான் இந்த பிரச்சினை. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து சென்றுவிட முடியாது. சேம்பரில் உள்ளவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் அதன்பிறகு தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட எந்த படமும் தமிழத்தில் வெளியாகாது பிரச்சினை பெரிதாகும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.