காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் லியோ படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டேன் என்று கூறியதாக ஒரு ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.
லியோ படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் லியோ படம் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக தமிழகம் – கர்நாடகம் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவத்து எல்லையில் தடை செய்யப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான போராட்டங்கள் கர்நாடகாவில் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது, தமிழர்கள் நடத்தும் நிறுவனங்கள் மீது தாக்குதல், தமிழ் படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் சித்தார்த் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தபோது, கன்னட அமைப்பினர் திடீரென தகராறில் ஈடுபட்டதால், சித்தார்த் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக கன்னட சூப்பர் ஸ்டார் சிவாராஜ்குமார் மன்னிப்பு கோரியிருந்தார். இதனிடையே வரும் அக்டோபர் 19ந் தேதி லியோ படம் வெளியாக உள்ள நிலையில், கன்னடத்திலும் லியோ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெடித்து வரும் போராட்டத்தினால் லியோ படம் அங்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் லியோ படம் குறித்து பேசுவது போன்ற ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில், "எல்லோருக்கும் வணக்கம், நான் உங்கள் விஜய் பேசுகிறேன். தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சனையின் காரணமாகவும், நடிகர் சித்தார்த்தை தாக்கிய கன்னட அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் என் 'லியோ' படத்தை நான் கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை. இதையே கர்நாடகா மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் 2026ல் மிகப்பெரிய விளைவை சந்திக்க வேண்டி வரும். நன்றி" என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த ஆடியோ பதிவை தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இது விஜய் பேசியது அல்ல என்று உண்மை அனைவருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், விஜய்க்கு நெருக்கமான பி.ஆர்.ஓக்கள் இந்த ஆடியோ பொய்யானது என்று உறுதி செய்துள்ளனர். விஜய்க்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பும் இந்த செயலுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“