சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இந்தி சென்சார் உரிமைக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் பணியகம் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஏ.ஏ.ஏ, பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் வெளியான படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவல் நிகழ்வை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பு குறித்து தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் விஷால், "வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதனை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் நடப்பது அதைவிட மோசமானது. மும்பை திரைப்பட தணிக்கை (CBFC) அலுவலகத்தில் எனது திரைப்படம் மார்க் ஆண்டனி இந்தி பதிப்புக்காக சென்சார் போர்டுக்கு 6.5 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல. எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரம். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
படத்தை பார்ப்பதற்கே முதலில் 3 லட்ச ரூபாயும், பார்த்தவுட் சான்றளிப்பதற்கு 3.5 லட்ச ரூபாய் கேட்டதாகவும் கூறியிருந்த விஷால் அதற்கான ஆதாரங்களையும் சமர்பித்திருந்தார். இதனிடையே மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது இப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதுடன், ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் மகன் விஷால் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
இந்நிலையில், சென்சார் போர்டு தன்னிடம் லஞ்சம் கேட்டதாக விஷால் வீடியோ மூலம் கூறிய குற்றச்சாட்டு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஊழல் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் திரைப்பட தணிக்கை அலுவலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டு துரதிஷ்டவசமானது. இது போன்ற ஊழல் சம்பவங்களில் மத்திய அரசு 0 சதவீதம் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கை எடுக்கும். யாரேனும் இது போன்று ஊழல் செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கை துறையால் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவங்களை சந்தித்திருந்தால் அது தொடர்பான தகவல்களை வழங்கி மத்திய அரசுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குமாறும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.