Tamil Actors Return To Television : தற்போதைய காலகட்டத்தில் திரைத்துறையை விட சின்னத்திரை ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் தடை செய்யப்பட்டதால், ரசிகர்கள் பலரும் சின்னத்திரை ஷோக்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதில் ஒரு சில திரைப்படங்களும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் சின்னத்திரைக்கு கொடுத்து வரும் ஆதரவை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தொலைக்காட்சிகள் நாள்தோறும் புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகின்றனர். அப்படி புதிதாக தொடங்கப்படும் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வெள்ளித்திரை நட்சத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரை பலரும் சின்னத்திரையில் களமிறங்க உள்ளனர்.
விஜய் சேதுபதி
தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே ஒரு சில படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் இவர் விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு சன்டிவியில் தொடங்கப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, தற்போது 2-வது முறையாக சன்டிவி நிகழ்ச்சியுடன் இணைந்துள்ளார். இது தவிர 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான பெண் தொடரின் மூலம் விஜய் சேதுபதி சின்னத்திரையில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
மதுமிதா
ஒரு கல் கரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாக ஜாங்கிரி மதுமிதா, அதன்பிறகு பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் விஜய் டிவியின் லொல்லு சபா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்த இவர் கடைசியாக கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.
கனிகா
கடந்த 2002-ம் ஆண்டு ஃபவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கனிகா அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அஜித்தின் வரலாறு படத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர், சிங்கப்பெண்ணே என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். இந்நிகழச்சி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு முதல் விஜய் டிவியின் கலக்கப்போவது யார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷகீலா
தென்னிந்திய திரையலகில் பல படங்க்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷகீலா. சின்னத்திரையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2-வில் கலந்துகொண்ட இவர் கன்னட பிக்பாஸ் நகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது ஆகஸ்ட் 1 முதல் ஒளிபரப்பாகும் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சியில் ராஜமாதாவாக நடிக்க உள்ளார்.
ஜீவா தங்கவேல்
லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜீவா தங்கவேல், தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எங்க வீட்டு மீனாட்சி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் சிதம்பரம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
ரோபோ சங்கர்</strong>
சின்னத்திரையில் காமெடி ஷோக்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட ரோபோ சஙகர் தமிழில் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் அஜித்துடன் நடித்த விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கன்னத்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.
சோனா
தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனா அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தற்போது அபி டெய்லர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
அர்ஜூன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அர்ஜூன் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான நன்றி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 12 படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜூன் சின்னத்திரையில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்பார்க்கப்படுகிறது. இதுவே இவரின் தொலைக்காட்சி அறிமுகமாகும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil