சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
கேரளாவை பூர்விமாக கொண்ட அமலாபால் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பால்க்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. முதல் 2 படங்களில் பெரியதாக கவனம் ஈர்க்காத அமலா பால் மைனா படத்தின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தார். தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த அமலாபால் அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் காதலில் விழுந்தார். இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனிடையே சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அவரது காதலர் ஜெகத் தேசாய் ப்ரபோஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்த நிலையில், அமலா பால் அந்த காதலை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் தனது காதலர் ஜெகத் தேசாய்-யை திருமணம் செய்துகொண்ட அமலாபால் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சூசகமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதல் புகைப்படத்தில் அவது நெஞ்சில் அமலாபால் இருப்பது போன்றும், 2-வது புகைப்படத்தில் அமலா வயிற்றில் கை வைத்திருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்திற்கு, இப்போது எங்களுக்கு தெரியும் 1+1=3 என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அமலா பால்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“