நான் திரைப்படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருந்தால் விஜய், மற்றும் பிரஷாந்த் ஆகியோருக்கு நாயகியாக நடித்திருப்பேன் என்று நடிகை பாலாம்பிகா தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் எதற்கும் ரெடியாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று நடிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். நடிகைகள் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் வேறு ஒரு எதிர்பார்ப்புடன் அவர்களை அனுகுவது காலம் காலமாக தொடர்ந்து வருவதாக நாயகிகள் கூறி வருகின்றனர். முன்பு இது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது நடிகைகள் பலரும் இது குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகை பாலாம்பிகா மனம் திறந்து பேசியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பரின் மகள் பாலாம்பிகா. தனது மகளை சினிமாவில் நாயகியாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய ராமசாமி, பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்த நடிகன் படத்தில் குஷ்புவின் தங்கையாகவும், பாட்டுக்கு ஒரு தலைவர்கள் படத்தில் விஜயகாந்துக்கும், திருமதி பழனிச்சாமி படத்தில் சத்யராஜூவுக்கும் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பல முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக நடித்திருந்த பாலாம்பிகா சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, நாதஸ்வரம், பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசிய அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் விஜய்க்கு நாயகியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். விஜய் பிரஷாந்த் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வெண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பா அப்படி ஒன்றும் நீ நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் இந்த வாய்ப்புகள் அனைத்தும் மாறிப்போனது. விஜயோடு நடித்திருந்தால் என் வாழ்க்கை மாறியிருக்கும்.
எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. என் கணவர் தினமும் குடித்துவிட்டு வருவார். ஒருமுறை மகனை டாஸ்மாக் போக சொல்லி அழைத்தார். அப்போது இருந்து திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜூவை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“