இந்திய சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகை என்ற அடையாளத்துடன் வலம் வந்த பானுமதி, படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் குடித்துவிட்டு படப்பிடிப்பு வந்ததால், படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1954-ல் வெளியான சக்ரபாணி, 1975-ல் சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகியாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய பானுமதி, அப்போ தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்த பி.யூ.சின்னப்பாவுடன் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 1949-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் ரத்னகுமார். பி.யூ.சின்னப்பா – பானுமதி இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு, பி.எஸ்.ராமய்யா கதை எழுதியுள்ளார். ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர்.
பி.யூ.சின்னப்பா சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல் ரத்னகுமார் படத்தின் படப்பிடிப்பிலும் அவ்வாறு இருந்தபோது, ஒருநாள், பி.யூ.சின்னப்பா – பானுமதி இணைந்து நடிக்கும் நெருக்கமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போதும் பி.யூ.சின்னப்பா மது அருந்தி இருந்த நிலையில், சிகரெட் பிடித்து உடனே படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்கியபோது, அவரது அருகில் சென்ற பானுமதி, மது மற்றும் சிகரெட் வாடை தாங்க முடியாமல், தனக்கு தலை வலிப்பதாக கூறி படப்பிடிப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து பானுமதியின் கணவரிடம் விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்துள்ளது. பி.யூ.சின்னப்பா மது அருந்திவிட்டு வந்ததால் தான் பானுமதி நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதை கேள்விப்பட்ட பி.யூ.சின்னப்பா அன்று முதல் ரத்னகுமார் படத்தின் படப்பிடிப்பிற்கு மது அருந்திவிட்டு சிகரெட் பிடித்துவிட்டு வருவதை நிறுத்திக்கொண்டார். அதன்பிறகு சமாதானம் செய்து படப்பிடிப்பு நடந்துள்ளது. அதே சமயம், நான் இப்படி இருப்பது பிடிக்கவில்லை என்றால் பானுமதி என்னிட்டம் நேரடியாக சொல்லியிருக்கலாமே, அதற்காக ஏன், தலைவலி என்று செட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நியாயமாக கேட்டுள்ளார் பி.யூ.சின்னப்பா. இந்த படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“