1939-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் நடிகை பானுமதி, சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போய், ‘’விட்டா என்னையே காலி செய்துவிடுவார் போல’’ என்று கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1954-ல் வெளியான சக்ரபாணி, 1975-ல் சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகியாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
1939-ம் ஆண்டு சினிமாவில் நுழைந்த பானுமதி, 13 வருட இடைவெளிக்கு பிறகு 1952-ம் ஆண்டு சினிமாவிற்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். வி.எஸ்.ராகவன் இயக்கிய இந்த படத்தில், பானுமதி, டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்தராஜலு நாயுடு இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது, சிவாஜியை பற்றி இயக்குனரிடம் விசாரித்த நடிகை பானுமதி, பையன் எப்படி என் அளவுக்கு நடிப்பாரா? எனக்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சில நாட்கள் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பானுமதி, கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க, விட்டா என்னையே காலி செய்துவிடுவார் போல என்று இயக்குனரிடம் கூறியுள்ளார்.
இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பிறகு பல படங்களில் சிவாஜியுடன் பானுமதி இணைந்து நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“