தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை பாவனா ராமண்ணா, 40 வயதில் திருமணம் ஆகாத நிலையில், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தனது வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தை என்றும் பெருமையாக தெரிவித்துள்ளார்.
1996-ம் ஆண்டு துலு மொழியில் வெளியான மாரிபலா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பாவனா ராமண்ணா. தொடர்ந்து, கன்னட மொழியில் சில படங்களில் நடித்திருந்த அவர், 1999-ம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். மோகன் இந்த படத்தில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்த இவர், இந்தி, கன்னட மொழியில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2023-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்டா என்ற படத்தில் நடித்திருந்தார். 40 வயதாகும் பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாக உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது கதை, பல பெண்களுக்கும் தைரியத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சை முடிவைப் பற்றி தனது தந்தையிடம் கூறியபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து பேசியுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/28/bhavana-ramanna-2025-07-28-18-35-51.jpg)
அதில், "நான் வீட்டிற்கு வந்து ஐ.வி.எஃப் சிகிச்சையைத் தொடங்கியதாக என் தந்தையிடம் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'நீ ஒரு பெண் – உனக்கு தாயாகும் உரிமை இருக்கிறது' என்று கூறினார். என் சகோதர சகோதரிகள் என்க்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். ஒரு ஒற்றைத் தாய்க்கு இது போன்ற ஒரு குடும்ப ஆதரவு மிக அவசியம். அதே சமயம், "இது சரியான பாதையா?" என்று கேள்வி எழுப்பியவர்களும் சிலர் இருந்தார்கள். அதற்கு, "நான் இந்த முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்" என்று பவானா பதிலளித்துள்ளார்.
பவானா ஐ.வி.எஃப் சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நீண்ட காலமாக, இந்தியாவில் தனிப் பெண்கள் அல்லது திருமணமாகாத பெண்கள் ஐ.வி.எஃப் சிகிச்சையைப் பெறுவதற்கு சட்ட ரீதியான ஆதரவு இல்லை. ஆனால், சட்டக் கட்டமைப்பு மாறிய பிறகு, ஐ.வி.எஃப் கிளினிக்குகளை அணுகத் தொடங்கியுள்ளார். ஆனால் பல சென்டர்களில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முயற்சியை கைவிடாத அவர், தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு கிளினிக்கைக் கண்டறிந்து தனது சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.
இதில் ஆச்சரியப்படும் விதமாக, பவானா முதல் முயற்சியிலேயே கருத்தரித்தார். இந்தியாவில் ஐ.வி.எஃப் சிகிச்சைக்கான சட்டப்பூர்வ வயது 20 முதல் 50 வயது வரை என்பது குறிப்பிடத்தக்கது. 40 வயதில் தாய்மையின் உந்துதலை உணர்ந்த பவானா, தனது கர்ப்பத்தை ஜூலை 4, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தனது பேபி பம்பை காட்டும் இரண்டு படங்களைப் பகிர்ந்து, நெற்றியில் பொட்டுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து தனது சமூகவலைதள பதிவில், "புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இதைச் சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை - ஆனால் இங்கே நான், இரட்டைக் குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன், நன்றியால் நிரம்பி வழிகிறேன். எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. ஆனால் எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல ஐ.வி.எஃப் கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன," என்று பாவனா பதிவிட்டுள்ளார்.