திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில், நாரி பூஜைக்காக இந்த வரும் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பூஜை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை குஷ்பு தனது சமூகவலைதள பக்கததில் பகிர்ந்துள்ளார்.
தேசத்தின் மிகவும் பழமைவாய்ந்த தேவஸ்தானங்களில் ஒன்றாக ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், திருச்சூர் மாவட்டம் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விஷ்ணுமாயா சிவபார்வதியில் குழந்தையாக கருதப்படும் நிலையில், தினமும் மதியம் 12 மணிக்கு நடைபெறும் விஷ்ணுமாயா நடனத்தில் விஷ்ணுமாயா கூறும் வாக்குகள் பலிக்கும் என்பது ஐதீகம்.
சாதி மதம் பேதமில்லாமல் எம்மதத்தினரும் இந்த கோவிலில் வந்து வழிபட அனுமதி உள்ள நிலையில், தீர்க்கப்படாத பிரச்சனைளுடன் போராடுபவர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். மேலும் இந்த கோவிலில் நடைபெறும் நாரி பூஜை பெரும் பிரபலம். கடவுளின் உத்தரவின்படி இந்த கோவிலில் இருக்கும் நம்பூதரிகள் ஆண்டுதோறும் பிரபலமான ஒரு பெண்ணை தேர்வு செய்து நாரி பூஜை நடத்துவார்கள்.
நாரி பூஜை நாளில் இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்களை விருந்தினராக அழைத்து பூஜை செய்கிறார்கள். அலங்கரித்த இடத்தில் அமரவைத்து மிகவும் பக்தியுடன் பூஜை செய்யப்படும். பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்பது நம்பிக்கை. எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் நாரி பூஜையில் பெண்களுக்கு மரியாதை நடைபெறுகிறது.
கடவுளின் ஆசியும் அதிஷ்டமும் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த நாரி பூஜை செய்ய அனுமதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவில் நிர்வாகத்தினர் இந்த ஆண்டு குஷ்புக்கு நாரி பூஜை செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றேன். திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. இது எனது பாக்கியம் ஆகும். குறிப்பிட்ட நபர்களே, இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர், அதுவும் தெய்வமே அந்த நபரை தேர்வு செய்யும் என்பது நம்பிக்கை
இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். தினமும் ஜெபித்து, நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புகிற அனைவருக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.. என் அன்புக்குரியவர்களுக்காகவும், உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
நாரி பூஜை என்றால் என்ன?
‘நாரி பூஜை’ என்பது கேரளக் கோயில்களில் பின்பற்றப்படும் ஒரு சடங்கு, குறிப்பாக மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சக்குளத்து தேவி கோயிலில், சாதி, மதத்தைப் பொருட்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பழங்கால சடங்குகள் செய்யப்பட்டு வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தனுமாசத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது. கோவிலின் தலைமை அர்ச்சகரே சடங்குக்காக ஒரு நாற்காலியில் (பீட்டம்) ஒரு பெண்ணை அமர வைத்து பூஜையை நடத்துகிறார், இந்த பூஜையில் அவர் அவர்களின் கால்களைக் கழுவுகிறார். பின்னர், பெண்களுக்கு மாலை அணிவித்து, மலர்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கோயில் அறங்காவலர்கள் கௌரவ விருந்தினரைத் தீர்மானிக்கிறார்கள், பின்னர் அவர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வழிபடப்படுகிறார். ஏற்கனவு பாடகி கே.எஸ்.சித்ரா மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் போன்ற பல பிரபலங்கள் இதே போன்று நாரி பூஜையில் பங்கேற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.