Actress Nayanthara Vignesh Shivan News : டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.
தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து 2-வது படமான சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த இவர், அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித். சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகளுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டும் நடித்து வரும் இவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனி நாயகியாக நடித்த அறம் படம் பெரும் வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து, ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த நயன்தாரா தற்போது தனி நாயகியாக நடித்துள்ள படம் நெற்றிக்கண். பார்வையற்றவராக இவர் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வரும் நயன்தாரா இது தொடர்பாக நடத்தப்பட்ட டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது கையில் இருந்த மோதிரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள நயன்தாரா இது எனது நிச்சயதார்த்த மோதிரம் என்றும், எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்நிகழ்ச்சி குறித்து மற்றொரு ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு டைம் மிஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, கண்கலங்கிய நயன்தாரா, தற்போது தனது அப்பா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார். அவர்தான் என் ரோல் மாடல். இப்போது எனக்கு டைம் மிஷின் கிடைதால் 10 வருடங்களுக்கு பின்னால் சென்று எனது அப்பாவை குணமடைய செய்வேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இது தொடர்பாக ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அப்பா குணமடைந்து விடுவார் என்று நயன்தாராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த நானும ரவுடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போதே அவருக்கும் அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil