ஷாருக்கானுடன் ஜவான் படத்திற்கு நடித்து வரும் நடிகை பிரியா மணி ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியபோது நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். கடந்த 4 ஆண்டுகளாக இவரது படங்கள் வெளியாகாத நிலையில், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் ஷாருக்கானுக்கு பெரிய வெற்றியாக அமைந்து 4 வருட இடைவெளியை மறக்கடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பதான் இந்திய சினிமாவில் பெரிய வசூல் வேட்டை நிகழ்த்தியது.
இந்த படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்து வருகதாக கூறப்படுகிறது. யோகிபாபு காமெடியானாக நடித்து வரும் இந்த படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
பிரியாமணி ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ஷாருக்குடன் இணைந்துள்ள பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்தும் அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,
இயக்குனர் ரோகித் ஷெட்டியின் அலுவலகத்தில் இருந்து திடீரென எனக்கு ஒரு போன் வந்தது. அப்போது நான் பெங்களூருவில் இருந்தேன். அந்த போன்காலில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் யாரே கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனாலும் இது உண்மையா என்று விசாரிக்குமாறு எனது மேனேஜரிடம் சொன்னேன்.
விசாரித்ததில் இது உண்மைதான் என்று தெரிந்தது. அதன்பிறகு ஷாருக்கானை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் என் வாழ்நாள் கனவை நிறைவேற்றிக்கொள்ள உடனடியாக மும்பைக்கு சென்றேன். இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் அலுவலகத்திற்கு என்றபோது அவர்கள் மரியாதையுடன் என்னை வரவேற்றனர்.
அதன்பிறகு நான் நடனமாட வேண்டிய பாடல் குறித்து எனக்கு விளக்கம் கொடுத்தார்கள். ஷாருக்கான் பழகுவதற்கு இனிமையான மனிதர். அடக்கமானவர். அனைவரையும் அன்புடன் பார்த்துக்கொள்வார். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட நடனத்தை திரும்ப திரும்ப ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஷாருக்கான் என்னை உட்கார சொன்னார். ஆனால் பரவாயில்லை சார் எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் எத்தனை முறை ஆட சொன்னாலும் ஆடுகிறேன் என்று சொன்னேன்.
அதன்பிறகு நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஐபேடில், கவுன் பனேகா க்ரோர்பதி விளையாடினோம். இதில் ஷாருக்கானுக்கு நான் சரியாக பதில் கொடுத்ததால் அவர் எனக்கு ரூ 200 கொடுத்தார். ஷாருக்கான் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் தனது உதவியாளர்களை செட்டுகளுக்கு சென்றாலும், வீட்டிற்கு சென்றாலும் தன்னுடனே அழைத்துச்செல்வார். ஷூட்டிங்கில் பேக்கப் செய்தாலும் ஷாருக்கன் பயிற்சியில் இருப்பார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“