தமிழ் சினிமாவில் முதல் படமே பிரம்மாண்ட வெற்றியாக கொடுத்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்து, அடுத்தடுதது வெற்றிகளை குவிக்க தவறிவிடுவார்கள்.
ஒரு சில நடிகர்கள் முதல் படம் பிரம்மாண்ட வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அடுத்து நடிக்கும் படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். அந்த வகையில் பிரம்மாண்ட வெற்றியை தனது முதல் படத்திலேயே அறுவடை செய்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்தி. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானர். மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வந்து போன கார்த்தி 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பருத்தி வீரன் தான் கார்த்தி ஹீரோவாக நடித்த முதல் படம் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இவர் முதல் பட ஹீரோ என்ற உணர்வை தராமல், தனது நடிப்பில் மூலம் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருப்பார். கார்த்தியின் திரை வாழ்க்கையில் பருத்தி வீரன் அவருக்கு முக்கிய படமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு முன்பு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், பிரியாமணிக்கும் தமிழ் சினிமாவில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது பருத்தி வீரன் படம் தான். 90-களில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் சரவணன் பெரிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தான் மீண்டும் ரீ-என்டரி கொடுத்தார்.
இந்த படத்தில் அவர் ஏற்று நடித்த சித்தப்பு என்ற கேரக்டர் அவரது பெயரின் இடைமொழியாக மாறிவிட்டது. அதேபோல், மௌனம் பேசியதே, ராம் என இரு பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அமீர் இயக்கிய 3-வது படம் பருத்தி வீரன். ஆனால் அவரே ஒரு பேட்டியில் மீண்டும் பருத்தி வீரன் போன்ற ஒரு படத்தை தன்னால் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். பொன்னவண்ணன் ஒரு கிராமத்து வில்லன் கேரக்டரிலும் அசத்தியிருந்தார். இப்படி பல நடிகர்களுக்கு அடையளமாக இருக்கும் பருத்தி வீரன் திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசைமைத்திருந்தார்.
படத்தில் ஊரோர புளியமரம் என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். இந்த பாடல் காட்சி முடிந்தவுடன், கார்த்தி - பிரியாமணி சண்டை நடந்து கார்த்தி அவரை அடிக்க அவர் சேற்றில் விழுவது தான் காட்சி. இந்த காட்சியை படமாக்க ஒரு வாரத்திற்கு முன்பு, பள்ளம் தோண்ட சொன்ன அமீர் தண்ணீரை நிரப்பிவிட்டு, அப்படியே விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். ஒரு வாரம் கழித்து அந்த இடம் சேரும் சகதியுமாக இருந்துள்ளர். அப்போது தான் அந்த காட்சியை படமாக்கியுள்ளார்.
கார்த்தி உன்னை அடிப்பார் நீ சேற்றில் விழ வேண்டும் என்று அமீர் சொல்ல, பிரியாமணியும் ஓகே என்று கூறியுள்ளார். அதேபோல் கார்த்தி அறைய பிரியாமணி முதல் அறையிலே சேற்றில் விழுந்துள்ளார். ஆனால் இந்த காட்சி 3-4 டேக்கள் எடுத்துள்ளார். சேற்றில் விழுந்து விழுந்து உடல் முழுவதும் சேறாகிவிட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நாங்கள் மதிய சாப்பாடு 4.30 மணிக்கு தான் சாப்பிட்டோம். அந்த அளவுக்கு அந்த காட்சியை எடுத்தார் என்று பிரியாமணி கூறியுள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.