முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தான் முதல் கேடயம் பெற்றது குறித்து நடிகை ராதிகாவுடனான நேர்காணலில் தெரிவித்துள்ள பழைய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆயிரம் ஜென்மங்கள், முல்லும் மலரும், பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த் பின் நாளில் பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்து தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
தற்போது இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த்,ர நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், தான் சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார்.
இதனிடையே நடிகை ராதிகாவுடனான நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் தனது முதல் கேடயம் குறித்து அதை தனக்கு வழங்கியது யார் என்றும் கூறியுள்ளார். இதில் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் உடனான உங்களது சந்திப்பு குறித்து சொல்லுங்கள் என்று நடிகை ராதிகா கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் ரஜினிகாந்த், அபூர்வ ராகங்கள் படத்தின் வெற்றி விழாவிற்கு சென்றிருந்தேன்.

அந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலைஞர் பங்கேற்றார். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் அங்கு இருந்தார். அப்போது கலைஞர் அவசர வேலை காரணமாக முக்கியமானவர்களுக்கு ஷீல்டு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது ஏ.வி.மெய்யப்ப செட்டியார் எனக்கு ஷீல்டு வழங்கினார். இதுதான் நான் சினிமாவில் முதன் முதலில் வாங்கிய ஷீல்டு இந்த ஷீல்டை இன்னமும் எனது பெங்களூர் வீட்டில் பத்திரமாக வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு முறை ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு நான் ஷூட்டிங் வரும்போது மெய்யப்ப செட்டியார் அங்கு ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் காரில் இருந்து இறங்கி சென்று அவருக்கு வணக்கம் வைத்தேன். அவர் என்னை பார்த்துவிட்டு வாப்பா என்று சொல்லி முல்லும் மலரும் படம் பார்த்தேன் ரொம்ப அருமைய பண்ணிருக்கீங்க என்று பாராட்டினார். அதன்பிறகு விரைவில் ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னார்.
அதன்படி முரட்டுக்காளை படத்தை அவரின் ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஆனால் துரதிஷ்வசமாக படம் வெளியாகும் முன்பே அவர் இறந்துவிட்டார். தமிழ் சினிமாவில் அவர் கொண்டு வந்த ஒழுக்கம் தான் இன்னும் அனைவரும் கடைபிடித்து வருகிறோம். வடக்கில் எப்போது வேண்டுமானாலும் ஷுட்டிங் போகலாம் என்று போவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் மெய்யப்ப செட்டியார் கொண்டு வந்த ஒழுக்கம் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது என கற்றுக்கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil