திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து நடிக்கும் நடிகைகள், தான் ஏன் அவ்வாறு நடிக்கவில்லை என்பது குறித்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பசும்பொன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், இப்போது தமிழ் சினிமாவில், முக்கிய அம்மா நடிகையாக வலம் வருகிறார். அஜித்குமார் தொடங்கி தனுஷ் வரை பல நடிகைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சரண்யா, தற்போது ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ப்ரதர் படத்தில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு நடிகர் இயக்குனர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட பொண்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சரண்யா, தற்போது அம்மா கேரக்டரில் உச்சம் தொட்டுள்ளார்.
இதனிடையே திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து நடிப்பது குறித்து பேசியுள்ள சரண்யா பொன்வண்ணன், ஒரு நடிகையாக நான் திரைப்படத் துறைக்குள் நுழைந்தபோது, ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு உடை அணிபவர்களை நான் தவறாக சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். சிறுவயதில் இருந்து கல்லூரி படிக்கும் வரை, நான் தனிப்பட்ட முறையில் ஒரு ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் கூட அணிந்ததில்லை. எனக்கு அது பிடிக்காது.
எனவே, திரைப்படங்களிலும் அத்தகைய உடைகளை அணிய மாட்டேன் என்பது மட்டுமே என்னுடைய நிபந்தனையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, எனக்கு அத்தகைய உடைகளை அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. "நீ இதை அணிந்தால்தான் நடிக்க முடியும்" என்று சொல்லுமளவுக்கு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. மேலும், என்னுடைய முக அமைப்பும் எனக்கு மிகவும் கைகொடுத்தது. "ஒரு பாவப்பட்ட முகம் இருக்குங்க, நீங்கள் நல்ல ஹோம்லியாக இருக்கிறீர்கள்" என்று சொல்லி, யாரும் என்னை அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கச் சொல்லவில்லை.
ஆனாலும், கவர்ச்சியான உடைகளை அணியும் கதாநாயகிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அப்படி நடித்தால் தான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க முடியும். அந்தப் பட்டியலில் பார்க்கும்போது, கதாநாயகியாக நான் எதிர்பார்த்த வெற்றி எனக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், இதை என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லலாம். இந்த வெற்றி எனக்கு ஒரு கதாநாயகியாக கிடைத்த வெற்றியை விடப் பெரியது என்று கூறியுள்ளார்.