சினிமாவில் தான் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் இழந்து மீண்டும் எனது வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்கினேன் என்று நடிகை ஷகீலா கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னாளில் காமெடி நடிகையாக அனைவரையும் ரசிக்க வைத்தவர் நடிகை ஷகீலா. பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், தற்போது சினிமாவில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து வருகிறார் ஷகீலா.
அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்ட ஷகீலா இவ்வளவு ருசியாக சமைப்பார் என்பது பலரும் தெரிந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு பின் அனைவராலும் ஷகீலா அம்மா என்று அழைக்கப்படும் ஷகீலா அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். மேலும் வெளிப்படையாக அனைத்து கருத்துக்கள் குறித்தும் பேசி வருவது பலரையும் கவர்ந்து வருகிறது
மேலும் எதற்கும் பயப்படாமல் தனது கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தும் ஷகீலா அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தனது எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஷகீலாவின் சமீபத்தில் யூடியூப் சேனல் பேட்டி இணையத்தில் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஷகீலா, விக்கபீடியாவில் இருப்பது போல் எனக்கு சொந்தமாக வீடு, பிஎம்டபிள்யூ கார் என எதுவும் கிடையாது. 40 வருடங்களாக நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். சினிமாவில் நான் ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதித்த காலமெல்லாம் இருந்தது. நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் என் தங்கை எடுத்து சென்றுவிட்டார்.
வீட்டில் பணத்தை வச்சிருந்தா வருமான வரி சோதனையில் சிக்கிவிடுவாய் அதனால் பத்திரமாக நானே வைத்துக்கொள்கிறேன் என்று வாங்கி கொண்டு போனவர், கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டார். அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஷகீலாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளதா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“