நடிகை ஷோபனா தனது வீட்டில் பணம் திருடிய பணிப்பெண்ணை மன்னித்து மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1980-ம் ஆண்டு தமிழில் வெளியான மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. தொடர்ந்து ரஜினியுடன் தளபதி, கமல்ஹாசனுடன் எனக்குள் ஒருவன், விஜயகாந்துடன் பொன்மனச் செல்வன், சத்யராஜூடன் மல்லு வேட்டி மைனர் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி, இங்கிலீஷ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஷோபனா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீனிவாசா சாலையில் உள்ள தனது 3 அடுக்கு மாடி வீட்டில் தனது தாயார் ஆனந்ததுடன் வசித்து வரும் நடிகை ஷோபனா 2-வது தளத்தில் வசித்து, தரை தளத்தில் தனது நடன பள்ளியை அமைத்துள்ளார்.
இதனிடையே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் கடந்த ஒரு வருமாக ஷோபனாவின் வீட்டில் தங்கிய அவரது தாயை கவனித்து வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களாக ஷேபனாவின் வீட்டில் இருந்து சிறுக சிறுக பணம் காணாமல் போய் கொண்டே இருந்துள்ளது. இதை கவனித்த ஷோபனா இது குறித்து புகார் அளித்த நிலையில், வேலைக்கார பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வேலைக்கார பெண் விஜயா சிறுக சிறுக சுமார் 41 ஆயிரம் பணம் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இந்த பணத்தை கார் டிரைவர் மூலமாக தனது மகளுக்கு ஆன்லைன் வழியாக அனுப்பியுள்ளார். இந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விஜயா, வறுமையின் காரணமாக இந்த தவறை செய்துவிட்டதாக ஷோபனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த மன்னிப்பை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகை ஷோபனா பணிப்பெண் விஜயாவை மன்னித்து மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொண்ட நிலையில், அவர் எடுத்த 41 ஆயிரம் பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளவதாக கூறி புகாரை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“