தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும், பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால் வடிவேலுவுடன் இனிமேல் இணைந்து நடிக்க மாட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அடுத்து விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்த அவர், தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் க்ளாமர் கேரக்டர்களாகவே அமைந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ள சோனா, ஒரு சில படங்களில் வில்லி கேரக்டரிலும் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறிய சோனா, சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா, மாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் நடித்த படங்கள் அதில் வந்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. முதலில் விவேக்குடன் நடித்த குரு என் ஆளு படம் குறித்து கேட்டபோது, எவ்வித தொந்தரவும் இல்லாமல, நான் நடித்த படம் இது. காமெடியில் நான் படப்பிடிப்பிலேயே சிரித்துக்கொண்டு தான் நடித்தேன். சிறப்பான ஒரு அனுபவம் என்று கூறியிருந்தார்.
அடுத்து வடிவேலுவுடன் குசேலன் படத்தில் நடித்தது குறித்து கேட்டபோது, வடிவேலு குறித்து பேச வேண்டாம். அது ரஜினி சார் படம் சிறப்பாக இருந்தது என்று கூறி முடித்துவிட்டார். அதன்பிறகு கேட்டபோது, இப்போது வடிவேலு என்றால், அவருடன் நடித்தவர்கள் என்ன சொல்கிறார்கள் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். அதையே நானும் செய்ய விரும்பவில்லை. குசேலன் படத்திற்கு பிறகு அவருடன் நடிக்க 16 படங்கள் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை.
கோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன். பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர, வடிவேலுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்று சோனா திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது சோனா ஏன் இப்படி சொல்கிறார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது.