நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவய நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சுனைனா, 2008-ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சமீபத்தில் வெளியான விஷாலின் லத்தி படத்தில் விஷால் மனைவியாக நடித்திருந்தார். தற்போது ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் சுனைனா, கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று அவர் நடித்து வரும் ரெஜினா படத்தின் தயாரிப்பு நிறவனம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சுனைனாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதாகவும், இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்பது தொடர்பான கேள்வியும் எழுந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சுனைனாவை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் சுனைனா வழக்கமாக செல்லும் இடங்கள், மற்றும் அவரது தோழியின் வீடுகள் உள்ள பகுதிகள் என பல இடங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ரெஜினா படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்தியதில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் தயாரித்து வரும் ரெஜினா படத்தின் ப்ரமோஷனுக்காக இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த வீடியோ குறித்து உண்மையை விரைவில் வெளியிட இருந்ததாகவும், அதற்குள் போலீசார் விசாரணையை தொடங்கிவிட்டதாகவும் கூறிய தயாரிப்பு நிறுவனம், காவல்துறையின் நேரத்தை வீணடித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். பட ப்ரமோஷனுக்காக ஒரு நடிகை கடத்தப்பட்டதாக வெளியிட்ட வீடியோ பதிவு தொடர்பான உண்மை போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“