தமிழ் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் தனது அப்பா விடாததால் முக்கியமான 3 வெற்றிப்படங்களை தவறவிட்டதாக கூறியுள்ளார்.
Advertisment
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாணிக்யா என்ற கன்னட படத்திலும், கசபா என்ற மலையாளப்படத்திலும் நடித்த வரலட்சுமி நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிப்பேன் என்று தைரியமாக நெகடீவ் ரோலில் நடித்து வருகிறார்.
இதில் குறிப்பாக விஷாலுடன் சண்டக்கோழி 2, விஜயுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் பவர்ஃபுல் வில்லியாக நடித்து முத்திரை பதித்த வரலட்சுமி, இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், வில்லியாக பல படங்களின் வெற்றியை பெற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்திருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் ஆரவ், சார்ப்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கொன்றால் பாவம் படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்ட வரலட்சுமி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இதில் தனது அப்பா சரத்குமார் விடாததால் பாய்ஸ், சரோஜா, காதல் ஆகிய 3 வெற்றிப்படங்களில் வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார். பாய்ஸ் படத்தில் ஜெனிலியா நடித்த கேரக்டரில் நடிக்க வரலட்சுமி நடிக்க தேர்வாகியுள்ளார். ஆடிஷன் முடிந்து சித்தார்த்துடன் போட்டோஷூட் எல்லாம் முடிந்த பிறகு ஷங்கருக்கு வரலட்சுமிதான் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றினாலும் சரத்குமார் வரட்சுமி நடிக்க சம்மதிக்காததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
அதேபோல் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல என்ற பெரிய வெற்றிப்படத்தில் நடிக்க முதலில் வரலட்சுமி தான் தேர்வாகியுள்ளார். இந்த வாய்ப்பும் நழுவி போன நிலையில், வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அப்பா சரத்குமாரால் நழுவி போனது என்று கூறியுள்ளார். வெங்கட் பிரபு இப்போதும் கேட்பார். ஆனால் அப்போ நடந்ததை விட இப்போது இருப்பதை பேசு என்று சொல்லிவிடுவேன் என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“