சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து வந்த நடிகை விஜயலட்சுமி திடீரென மரணமடைந்த நிலையில், அவரது இறப்பு குறித்து அவரது மகள் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு ஊதாபூ கண் சிமிட்டுகிறது என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. தொடர்ந்து ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்த விஜயலட்சுமி சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்மூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் வீடு திரும்பிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
அவரது மரணம் தமிழ் சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தனது அம்மாவின் இறப்பு குறித்து நடிகை விஜயலட்சுமியின் மகள் பேசியுள்ளார். அம்மாவிற்கு கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சமீப காலமாக அவர் சிறுநீரகத்தில் கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கல் பிரச்னை ரொம்ப அதிகமானதால் பல பிரச்னைகளை சந்தித்தார்.
இந்த பிரச்னைக்காக ஆப்ரேஷன் முடிந்து வீடு திரும்பும்போது கூட நான் நல்லா இருக்கேன் சூப்பரா இருக்கேன் என்று சொன்னார். ஆனால் கடைசி இரண்டு நாள் அவர் எதுவுமே சாப்பிடவில்லை. தண்ணீர், ஜூஸ் இதுபோன்ற உணவுகளை தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நேற்று காலை அவரை சென்று பார்த்தபோது அசைவுகள் எதுவும் இல்லை.
அதன்பிறகு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தபோது அவர்கள் வந்து பல்ஸ் இல்லை ஹார்ட்பீட் இல்லை என்று சொல்லி அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த காலக்கட்டத்தில் பாட்டி வயது கேரக்டருக்கு கூட 40-50 வயது பெண்களை தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இவருக்கு 80 வயதாகிவிட்டது. இதனால் பட வாய்ப்பு சீரியல் வாய்ப்பு குறைந்தது. சீனியர் ஆர்டிஸ்ட் என்றாலும் தன்னை அழைக்கவில்லை என்ற மன அழுத்தம் அவருக்கு இருந்தது.
பாரதி கண்ணம்மா தொடரில் பாட்டியாக நடித்தார். அந்த சீரியலில் என் அம்மா நடித்தது எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அவர் ஹாஸ்பிட்டலில் இருந்ததால் ஷூட்டிங் போக முடியவில்லை. சீரியல்ஸ் மூவிஸ் எதுவும் இல்லை. யாரும் அவரை கூப்பிடவில்லை. நிறைய செலவுகள் கடந்த 9-10 மாதங்களாக அடிக்கடி ஹாஸ்பிடல் செலவு, இதை பார்க்கவே சரியாக இருந்தது. அவருக்கு நடந்த ஆப்ரேஷனில் பெரிய செலவு ஏற்பட்டது.
அதேபோல் பலருக்கு கடன் கொடுத்திருக்கிறார். 20-30 லட்சம் வரை பலருக்கும் கடன் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த பணம் இதுவரை திரும்ப வரவில்லை. இப்போது அவர்களிடம் கேட்டாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. இது மாதிரியான மன வருத்தங்கள் தான் அவரை மிகவும் பாதித்தது. அப்பா இல்லை, நானும் அம்மா மட்டும் தான் சொந்தக்காரங்களும் இல்லை. நான் போய்ட்ட அடுத்து என் பொண்ணுக்கு யாரு என்று நினைத்துக்கொண்டிருந்தார் என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“