Tamil Actors Whose First Movie Was Not Their Debut Film : பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படத்தைத் தான் நடிகர் / நடிகைகளின் முதல் படம் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் நிஜமாகவே அவர்கள் கையெழுத்திட்ட படம், சில காரணங்களால் கொஞ்சம் தள்ளிப்போய் ரிலீஸாகும். சரி அப்படி முதல் படம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் நிஜமான முதல் படத்தைப் பற்றி பார்ப்போமா...
சிம்ரானின் முதல் படம் 'ஒன்ஸ் மோர்' என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் படத்தில் விஜய்யுடன் திரையைப் பகிர்ந்திருப்பார். படம் வெளியாகி சிறப்பான வெற்றியையும் பெற்றது. ஆனால் சிம்ரனின் முதல் படம் ‘நேருக்கு நேர்’. சில காரணங்களால், 'நேருக்கு நேர்' 1997-ஆம் ஆண்டில் 'ஒன்ஸ் மோர்' படத்திற்குப் பிறகு வெளியானது.
த்ரிஷா 2002 இல் வெளியான 'மெளனம் பேசியதே' படத்தில் அறிமுகமானதாக நாம் அறியப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரது முதல் படம் 'லேசா லேசா'. இந்த படம் மெளனம் பேசியதே திரைப்படத்திற்குப் பிறகு ஓராண்டு கழித்து தான் வெளியானது.
’உள்ளம் கேட்குமே’ திரைப்படம் தான் அசினின் அறிமுக படமாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற சிக்கல்கள் காரணமாக, அந்தப் படத்தின் தயாரிப்பு தாமதமானது. அதாவது படம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெளியானது. 2005-ல் உள்ளம் கேட்குமே வெளியாவதற்கு முன்பே, 2004-ல் ’எம்.குமரன் சன் / ஆஃப் மகாலட்சுமி’ படம் அசினுக்கு அறிமுகம் கொடுத்தது.
2006-ன் பிற்பகுதியில் அல்லது 2007-ன் ஆரம்பத்தில் 'பொம்மலாட்டம்' படம் காஜல் அகர்வாலுக்கு அறிமுகப் படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் பல பிரச்னைகளைக் கொண்டிருந்தது. அனைத்து சிக்கல்களையும் தீர்த்து 2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில், 'பழனி' திரைப்படம் காஜலின் முதல் திரைப்பட அந்தஸ்தை வென்றது. அந்தப் படம் பொம்மலாட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
சமந்தாவின் முதல் படம் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படமல்ல. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தில், குறுகிய பாத்திரத்தில் நடித்திருப்பார் சமந்தா. ஆனால், ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி தான், அவர் நடித்த முதல் படம்.
விக்ரம் பிரபு நடித்த 'கும்கி', தான் லட்சுமி மேனன் கையெழுத்திட்ட முதல் படம். பின்னர் தான் அவர் 'சுந்தரபாண்டியன்' படத்தில் கையெழுத்திட்டார். இருப்பினும், ’சுந்தரபாண்டியன்’, 'கும்கி'க்கு முன்னால் அதன் படப்பிடிப்பை முடித்தது. 2012-ல் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து கும்கி வெளியானது.