அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை யுவன் இசையமைத்த பாடலில் இருந்து அனிருத் எடுத்தாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வருபவர்களில் முக்கியமானவர் அனிருத். ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜயின் லியோ, அஜித்தின் விட முயற்சி, கமலின் இந்தியன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு இசையமைத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தின் மூலம் அனிருத் இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 7-ந் தேதி ஜவான் படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனிடையே படத்திற்காகு ப்ரமோஷன் செய்யும் விதமாக படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தமிழில் ஒரு படம் வெளியாகும் முன்பே பாடல் வெளியிட்டாலும் வீடியோ பாடல் வெளியிடும் வழக்கம் இல்லை. ஆனால் இந்தி சினிமாவில் படத்தின் ப்ரமோஷனுக்காக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முன்பே அந்த படத்தின் வீடியோ பாடலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஷாருக்கானின் முந்தைய படமான பதான் படத்தின் வீடியோ பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் அதுவே படத்திற்கு ப்ரமோஷனாக அமைந்தது.
அந்த வகையில் தற்போது ஜவான் படத்தில் இருந்து முதல் பாடல் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியிடப்பட்டது. 3 மொழிகளிலுமே அனிருத் பாடியுள்ள இந்த பாடலில் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்களுடன் ஷாருக்கான் நடனமாடும் வகையில் பிரம்மாண்டமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த பாடலின் டியூன் யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்திற்காக வாய்ஸ் ஆஃப் யூனிட்டி என்ற தீப் பாடலில் இருந்து எடுத்து தான் அனிருத் இந்த பாடலை உருவாக்கியுள்ளதாக 2 பாடலையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாரி பாடலில் இருந்து தான் அனிருத் இந்த டோனை எடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
இதனிடையே வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடலே பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்திருந்த மரண மாஸ் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறி அனிருத் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் அனிருத் பாலிவுட் படத்திற்காக தனது பாடலையே பட்டி டிங்கரிங் செய்து பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“