விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக உள்ளதாக கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் போராட்டத்தை மையமாக வைத்த இந்த சீரியலில், பாக்யா கேரக்டரில் சுசித்ராவும், கோபி கேரக்டரில் சதீஷூம் நடித்து வந்த நிலையில், ராதிகா கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் கதை இந்த மூன்று கேரக்டர்களை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியான கோபி பாக்யா இருவரும் விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில், கோபி, தனது முன்னாள் காதலியும், பாக்யாவின் நெருங்கிய தோழியுமான ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், ராதிகாவின் ஆபீஸில் பாக்யா கேன்டீன் தொடங்கி நடத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கதையில் திடீர் திருப்பமாக நடிகர் ரஞ்சித் என்ட்ரி ஆனார். அவருக்கும் பாக்யாவுக்கும் நெருக்கம் வருவதுபோல் காட்சிகள் இருந்ததால், கோபி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்காது இதனால் நடிகர் சதீஷ் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த நடிகர் சதீஷ் தான் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ராதிகாவும் கோபியும் பாக்யா தங்கியிருக்கும் வீட்டுக்கே வந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே தவிர்க்க முடியாத சில காரணங்களால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் (கோபி) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சொல்லவே ரொம்ப கஷ்டமா இருக்கு இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். இன்னும் 10 அல்லது 15 எபிசோடுகளில் விலகிவிடுவேன். இதற்கு காரணம் என்ன என்று சொன்னால் பல காரணங்கள் உள்ளது. எனது தனிப்பட்ட காரணங்களும் கூட. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, என்னுடன் நடித்த சக நடிகர்களுக்கும், எனக்கு வாய்ப்பளித்த விஜய் டிவிக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“