கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய மாயா தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், அவர் ஒரு தடகள வீராங்கனை என்பதும், விக்ரம் படத்திற்கு முன்பே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் பலரும் அறியாத ஒரு தகவல்.
மதுரையை சேர்ந்த மாயா எஸ்.கிருஷ்ணன், பள்ளிப்படிப்பை மதுரையிலும், கல்லூரி படிப்பை பெங்களூருவிலும் முடித்துள்ளார். தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றுள்ள இவர், 6-வது இடத்தை பிடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ள மாயா, ஜிம்னாஸ்டிக் பிடிக்கும் என்பதால் சிறுவயதில் இருந்தே அதில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
விளையாட்டை போலவே, நடிப்பு, மாடலிங் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளார். ஜிம்னாஸ்டிக் போலவே சிறுவயதில் இருந்து நடிப்பு மற்றும் மாடலிங் துறையிலும் பயிற்சிகளை பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த மாயா, திரைத்துறையை தனது வாழ்க்கையாக தேர்வு செய்துள்ளார். இதற்காக வாய்ப்பு தேடும் வகையில் 2013-ம் ஆண்டு சென்னை வந்த மாயா, தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதால், தனியாக தங்கியுள்ளார்.
சினிமா வாய்ப்பு தேடி, பல மீடியா, மற்றும் ஆடிஷன்களை அட்டன் செய்த மாயாவுக்கு ஏமாற்றமேவ மிஞ்சியுள்ளது. இணையத்தில் உள்ள பல இயக்குனர்களில் தொடர்பு எண்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார். இதில் ஒருமுறை இயக்குனர் வெற்றிமாறனுக்கு கூட போன் செய்து வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படியே சென்றால் முடியாது என்று யோசித்த மாயா தியேட்டர் நடிகையாக மாறியுள்ளார். அங்கு 100-க்கு அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார்.
இப்படி நடித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு வானவில் வாழ்க்கை என்ற படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய இந்த படத்தின் மூலம் தான் மாயா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு தனுஷுன் தொடரி படத்தில் ஒரு ரிப்போர்ட்டராக வந்திருப்பார். அடுத்து மகளிர் மட்டும் படத்தில் அமீனா, வேலைக்காரன் படத்தில் நடிகை, 2.0 படத்தில் கல்லூரி மாணவி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார்.
அதன்பிறகு 2022-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் வருவது ஓரிரு காட்சிகள் தான் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் அதிகமான பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து லியோ படத்திலும் மாயா என்ற அதே கேரக்டரில் நடித்த இவர், டைம் என்ன பாஸ், 3 பிஎச்கே, உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
2015-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இவர், நடிகையாக நடித்து வந்தாலும், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த சீசனில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் மாயா, அந்த வெற்றியின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, தியேட்டர் நாடகங்கள் மீது வந்துள்ள ஈர்ப்பின் காரணமாக ஒரு தியேட்டரை கட்டவேண்டும் என்றும், அதன்மூலம் மேலும் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் நடித்தபோது, கமல்ஹாசனோடு சரியாக பேச முடியவில்லை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் அவரை பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியானது. அதேபோல் நிகழ்ச்சியில் மாயாவுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் சப்போர்ட் செய்வதாகவும், பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. மாயாவுக்கு சுவாஹதா என்ற சகோதரி இருக்கும் நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பாடகியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil