Bigg Boss 8 Set Accident: சென்னை பூந்தமல்லி அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த பணியில்போது ஏற்பட்ட விபத்தில், வடமாநில தொழிலாளி ஒருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் ப்ரமோ வெளியானது. மேலும் இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனுக்காக செட் அமைக்கும் பணி, சென்னை பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள இ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வரும் இந்த பகுதியில், தமிழ் திரைப்படங்கள், சீரியல்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் இந்த பிலிம் சிட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில், பல வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணி நடைபெற்றபோது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பதிவு செய்த, நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த தொழிலாளி சாயின்கான் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இ.வி.பி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பின்போது விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி வரும் நிலையில், ஏற்கனவே காலா, பிகில் ஆகிய படங்களின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்ட நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில், மரணம் நிகழ்ந்தது. பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“