scorecardresearch

‘இந்த 2 பேருக்காக என் இதயம் எப்போதும் துடிக்கும்’: சின்னத்தம்பி படத்தை நினைவு கூர்ந்த குஷ்பு

சின்னத்தம்பி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைபட்டுள்ளேன்

Kushboo
நடிகை குஷ்பு

சின்னத்தம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படம் குறித்து தனது நினைவுகளை நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வெளியான படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு, மனேரமா, ராதாரவி, கவுண்டமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த சின்னத்தம்பி கன்னடா தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் பிரபு குஷ்பு இடையேயான கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. சின்னத்தம்பி படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்தம்பி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைபட்டுள்ளேன். பி.வாசு, பிரபு ஆகிய இருவருக்காக என் இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கும். இளையராஜா அவர்களின் ஆன்மாவை கிளர்ந்தெழுக செய்த இசைக்காக என்றும் அவரை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களுக்கு எனது நன்றி.

சின்னத்தம்பி படத்தில் எனது நந்தினியின் கேரக்டர் அனைவரின் மனதிலும் இதயங்களிலும் என்னென்றும் பதிந்துள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil blockbuster hit movie chinnathambi complete 32 years actress kushboo says about

Best of Express