தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து விடுதலை படத்தின் மூலம் நாயகனாக மாறிய சூரி அடுத்து கருடன் என்ற பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் சூரி ஹாட்ரிக் வெற்றி பெற்றாரா?
நாயகி மீனாவுக்கு (ஆனா பென்) யாரோ செய்வினை வைத்துவிட்டதாக நினைக்கும் குடும்பத்தினர், அவரது மாமா பாண்டி (சூரி) உதவியுடன் செய்வினையை எடுப்பதற்காக, ஒரு சாமியாரிடம் அழைத்து செல்கின்றனர். இந்த பயணத்தின்போது இவர்களுக்கு இடையே நடக்கும், மோதல்கள், உரையாடல்கள், உள்ளிட்ட பல தடைகளால் வரும் குழப்பங்களை எடுத்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த கொட்டுக்காளி.
கூழாங்கல் என்ற அனைவரும் பாராட்டப்பட்ட ஒரு படத்தை கொடுத்த இயக்குனர் வினோத் ராஜ் அதே பாணியில் கொடுத்துள்ள படம் தான் இந்த கொட்டுக்காளி. இந்த படம் ரிலீஸ்க்கு முன்பே பல விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருதுகளை வென்றிருந்தது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முக்கிய காரணம் என்றாலும், கூட, படத்தின் நடிகர் சூரி, தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ஆகியோரும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.
இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை ஆனாபென் கதைக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக அவருக்கும் சேவலுக்குமான காட்சிகள், அதிக கவனம் ஈர்த்துள்ளது, அதேபோல் ஒரு கிராமத்து கதைக்கு எப்படி இருக்க வேண்டுமோ அதே போன்ற ஒரு உடல்மொழியை கொடுத்துள்ள ஆனாபென், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாக வரும் படத்தின் நாயகன் சூரி ஒரு நெகடீவ்கேரக்டர் தான் என்றாலும், கூட நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஆணாதிக்கம், எதற்கெடுத்தால் கோபப்டுவது, அடிப்பது என்று முரட்டுத்தனமாக அவரது நடிப்பும், ஹாட்ரிக் வெற்றியை தக்க வைப்பது போல் அமைந்துள்ளது. படம் முழுவதும் முறைத்தபடியே நடித்துள்ள சூரி, க்ளைமேக்ஸ் காட்சியில் தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் வினோத் ராஜ், இந்த படத்திலும் ஒரு பயணத்தை மையமாக வைத்து, தான் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக, ஆணாதிக்கம் என்ற பிம்பத்தில் சிக்கிக்கொண்ட பெண்களின் நிலை குறித்து தனது கேள்விகளை கொடுத்துள்ளார். படத்தின் ஆரம்பம் ஒரு குழப்பத்துடன் தொடங்கினாலும் முடிவில் மனிதர்கள் மனதளவில் எப்படி இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது.
விடுதலை கருடன் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் சூரிக்கு உண்மையில் கொட்டுக்காளி ஒரு ஹாட்ரிக் வெற்றிப்படம் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“