சமீபத்தில் மரணமடைந்த கேப்டன் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நிலையில், அவர் காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த வீடு இப்போர் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோவில் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணம், தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகந்தின் உடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், டிசம்பர் 29-ந் தேதி சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது நினைவிடத்தில் தற்போது பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே மறைந்த விஜயகாந்தக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் தனது குடுமபத்துடன் வசித்து வந்த நடிகர் விஜயகாந்த்க்கு பெரிய வீடு கட்டி அதில் குடுபத்துடன் வசிக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. அதன் காரணமாக சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்ட தொடங்கியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வீட்டின் பணிகள் இன்னும் முடிவடையாமல் பாதியிலேயே நிற்கும் நிலையில், விஜயகாந்த் மரணத்திற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக, அந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நடந்துள்ளது. வீட்டின் பணிகள் தொடங்கிய உடனே விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் வீட்டில் பணிகளை அவ்வப்போது வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இந்த வீட்டின் அருகில் இருப்பவர்கள் பேசும்போது, விஜயகாந்த் இந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் கடைசிவரை அவரின் இந்த ஆசை நடக்காமலே போய்விட்டது என்றும் கூறியுள்ளனர். அதேபோல் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயுடன் நடித்த விஜயகாந்த் சம்பளம் வாங்காத நிலையில், சம்பளத்திற்கு ஈடாக ஒரு இடத்தை எழுதி கொடுத்துள்ளார்.
தற்போது அந்த இடத்தில் தான் விஜயகாந்தின் புது வீடு கட்டப்பட்டு வருகிறது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் பணிகள் விரைவில் முடிடையும் என்றும், இன்றும் 3 அல்லது 4 மாதங்களில் விஜயகாந்த் குடும்பத்தினர் இந்த வீட்டில் குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஜயகாந்த் நன்றாக இருக்கும்போது இந்த இடத்தில் குடியேறியிருந்தால் இந்த ஏரியாவே நன்மையடைந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.